ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி... என்.எல்.சிக்கு ஒரு நீதியா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

 
anbumani ramadoss

ஸ்டெர்லைட் ஆலை  மூடப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும்  என்.எல்.சிக்கும் பொருந்தும். எனவே, இனியும்  தாமதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆணையிடக் கோரி அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள  வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ‘ஸ்டெர்லைட் தாமிர  உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.  சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்க முடியாது’ என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு,  என்.எல்.சி சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க மறுப்பது ஏன்? என்பது தான் பா.ம.க. எழுப்பும் வினா. 

என்.எல்.சியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அண்மையில் இரு தொண்டு நிறுவனங்கள் ஆய்வு நடத்தின. அதில் ஆய்வு நடத்தப்பட்ட பகுதிகளில் 90.32% இடங்களில் நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு வெள்ளூர் என்ற இடத்தில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 250 மடங்கு பாதரசம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட 90% வீடுகளில் உள்ளவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறுநீரகம், தோல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் என்.எல்.சியால் ஏற்பட்ட சீர்கேடுகளையும், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்ட சீர்கேடுகளையும் ஒப்பிடவே  முடியாது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை விட என்.எல்.சியால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆயிரம் மடங்கு அதிகம். கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் என்எல்சியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தை சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மத்திய அரசே அறிவித்திருக்கிறது. 

Anbumani Ramadoss

கடலூரைக் கடந்து அண்டை மாவட்டங்களிலும்  என்.எல்.சி நிறுவனத்தால்  ஏராளமான பாதிப்புகள்  ஏற்பட்டிருக்கின்றன.  ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்டது அழிவு என்றால், என்.எல்.சியால் நிகழ்ந்து கொண்டிருப்பது பேரழிவு ஆகும். இது தடுக்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி... என்.எல்.சியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஒரு நீதி என்பதே பெரும் அநீதி ஆகும். மண்ணுக்கும், மக்களுக்கும் பாதிப்பை  ஏற்படுத்தும் நிறுவனங்கள் எவையாக இருந்தாலும் அவை மூடப்பட வேண்டும்.  ஸ்டெர்லைட் ஆலை  மூடப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும்  என்.எல்.சிக்கும் பொருந்தும். எனவே, இனியும்  தாமதிக்காமல்  என்.எல்.சி நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.