"பாலாற்றின் குறுக்கே புதிய அணை - தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சி" - தினகரன் கண்டனம்!!

 
TTV STALIN

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது - தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

TTV Dhinakaran

கர்நாடகாவில் உற்பத்தியாகி ஆந்திர மாநிலத்தின் வழியாக தமிழ்நாட்டில் அதிகளவு தூரம் பயணிக்கும் பாலாற்றின் மூலம் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்கள் தனக்கான குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன.

பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டிருப்பட்டிருக்கும் 22 அணைகளால் போதிய தண்ணீரின்றி தமிழகத்தின் வட மாவட்டங்கள் வறட்சியை சந்தித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக புதிய அணையை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசும் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வரும் நிலையில், தற்போது பாலாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஆந்திர அரசும் தீவிரம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, தமிழகத்தின் வடமாவட்டங்களின் நீர் ஆதாரத்தை கேள்விக்குறியாக்கும் ஆந்திர அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து முற்றுப்புள்ளி வைப்பதோடு, எதிர்காலத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.