எழும்பூர் நீதிமன்றத்தில் அஞ்சலை ஆஜர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஞ்சலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவரும், ஆற்காடு சுரேஷின் தோழியும், பிரபல ரவுடியுமான புளியந்தோப்பு அஞ்சலை தன் பங்காக கொலையாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் செலவுக்கு பணம் கொடுத்தது தொடர் விசாரணையில் வெளிவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வியாபாரிகள் ,ஏழை எளிய மக்களுக்கு கடன் கொடுத்துவிட்டு பிறகு அவர்களிடம் கந்து வட்டி, மீட்டர் வட்டி போட்டு வசூல் செய்வது, இல்லையென்றால் கடன் வாங்கியவர்களின் உடமைகளை பறித்துக் கொள்வது அசையா சொத்துக்களை எழுதி வாங்குவது என கந்து வட்டி தொழிலில் கொடி கட்டி பறப்பவர் அஞ்சலை. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஞ்சலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அஞ்சலை மீது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றன. அஞ்சலையை விரைவில் காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.