பொறியியல் கல்லூரிகளுக்கு கடும் கட்டுப்பாடு - அண்ணா பல்கலை. அதிரடி

 
அண்ணா

பொறியியல் கல்வித்தரத்தை வலுப்படுத்தும் விதமாக போதிய  உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் நீட்டிப்பை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள்,  தகுதியான பேராசிரியர்கள் இல்லை என்று தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. தனியார் கல்லூரிகளுக்கு அவற்றின் தரம்,  வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு அடிப்படையில்  அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கல்வியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தரம் குறைந்த பொறியியல் கல்லூரிகளை களையெடுக்கும் வகையில் வரும் 2023 - 24 ஆம் கல்வியாண்டு முதல் உறுப்பு கல்லூரிகளுக்கு தர மதிப்பெண் அடிப்படையில் அங்கீகாரம் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.  

கல்லூரி

 இதில் கல்லூரிகளின்  தரம்,  பேராசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து தர மதிப்பெண் வழங்கவும் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருக்கிறது.  இந்த தர குறியீடுகளுடன் அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க தவறும் கல்லூரிகள்,  அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.  

இதனால் தரம் குறைந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வது தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.  அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த புதிய தரக் கொள்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கும் முன் மாணவர் தேர்ச்சி வீதம்,  அவர்களுக்கு தரப்பட்ட வேலை வாய்ப்புகள் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.