பேராசிரியர்கள் நியமன முறைகேடு : சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்கப்படும் - அண்ணா பல்கலை. உறுதி...
பேராசிரியர்கள் பணி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் உறுதியளித்துள்ளார்.
தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 480 உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 52,500 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவற்றில் 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் 353 பேராசிரியர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ள இந்த முறைகேட்டில் 5 பேராசிரியர்கள் பேர் ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளில் முழுநேரப் பேராசிரியர்களாகப் பதிவு செய்திருப்பதும், அதுமட்டுமின்றி ஒரே பேராசிரியர் 32 கல்லூரிகளில் முழு நேரமாக பணியாற்றுவதாகவும் கணக்கு காட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அவ்வாறாக 211 பேராசிரியர்கள் ஏறத்தாழ 2,500 இடங்களில் பணிபுரிவதாகப் போலியாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ஆசிரியர் சராசரியாக ஒரே நேரத்தில் 10 கல்லூரிகளுக்கு மேல் முழுநேரப் பேராசிரியராகப் பணிபுரிவதாக, பொய்யாகக் காட்டி பெரும் மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, 972 முழுநேர பேராசிரியர் இடங்கள் மோசடியாக நிரப்பியதை அண்ணா பல்கலைக்கழகமும் அங்கீகரித்துள்ளதாக அடுத்தடுத்து எழும் குற்றச்சாட்டுகள் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இந்த நிலையில், பேராசிரியர்கள் பணி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ் உறுதியளித்துள்ளார். மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அண்ணா பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் இனி பணியாற்ற முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பேராசிரியர்கள் பணி முறைகேடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


