அண்ணா பல்கலைக்கழக மாணவி நேப்பியர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி நேப்பியர் பாலத்தில் இருந்து கூவத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலை நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றுக்குள் ஒரு இளம் பெண் குதித்ததாக அந்தப் பகுதியில் நின்ற போக்குவரத்து காவலரிடம் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தெரிவித்து விட்டு சென்றார். போக்குவரத்து காவலர் அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கு போலீசருக்கு தகவல் தெரிவித்தார். அண்ணா சதுக்கம் போலீசார் வந்து பார்த்தபோது நேப்பியர் பாலத்தின் நடுவே ஒரு பை இருந்தது. அதில் செல்போன், அண்ணா பல்கலைக்கழக அடையாள அட்டை மற்றும் நோட்டு, புத்தம் ஆகியவை இருந்தன. அடையாள அட்டையை எடுத்து பார்த்தபோது சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த தனஞ்செயன் மகள் யுவஸ்ரீ (வயது 25) என்பதும், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிந்தது. கல்லூரி நோட்டை எடுத்து பார்த்தபோது அதில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
இரவு நேரமாகிவிட்டதால் நாளை காலை மீண்டும் தேடுதல் பணியை தொடர்வோம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வி காரணமா? அல்லது வீட்டில் ஏதாவது பிரச்சனையா? பல்கலைக்கழகத்தில் ஏதாவது பிரச்சனையா என? விசாரணை நடைபெறுகிறது. மாணவியின் செல்போன் அழைப்புகளையும், வாட்ஸ் அப் chatகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


