அண்ணாமலை மட்டும் நாட்டுக்காக பாடுபட பிறந்தவரா?? - கே.பி.முனுசாமி காட்டம்..

 
 கே.பி.முனுசாமி


தான் மட்டுமே நாட்டிற்காக பாடுபடுபவர் போல அண்ணாமலை பேசிக்கொண்டு வருவதாக அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி விமர்சித்துள்ளார். மேலும்,  அண்ணாமலை நேற்று வெளியிட்ட பட்டியலை பாஜக மாநில தலைவர் என்கிற அடிப்படையில் வெளியிட்டாரா? அல்லது தனி நபராக வெளியிட்டாரா?  என்றும் முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று, திமுக முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து விவரங்களை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதற்கும் துணிந்து தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். திமுக ஃபைல்ஸ் சொத்து பட்டியல் பார்ட் ஒன்றுடன் நிற்கப்போவதில்லை. தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சிகள் எல்லாம் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறதோ, அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அம்பலப்படுத்தப்படும். காரணம் ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் மொத்தமாக தான் எதிர்க்க வேண்டும்.” என்று காட்டமாக கூறியிருந்தார்.  

 அண்ணாமலை

ஆனால் அண்ணாமலை அதிமுகவைத்தான் மறைமுகமாக விமர்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து  வரும் அண்ணாமலை, அக்கட்சிக் கூட்டணியில் இருந்து விலகுவதற்காகவே இப்படி பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “திமுக பிரமுகர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை அண்ணாமலை பதிவு செய்துள்ளார். பாஜக மாநிலத் தலைவராக இருந்து இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டாரா? அல்லது தனிப்பட்ட அண்ணாமலை என்ற நபராக இருந்து இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டாரா?
 
பாஜக தலைவராக இருந்து அண்ணாமலை இந்த பட்டியலை வெளியிட்டார் என்றால் அவர்கள் ஆட்சி செய்கிற மாநிலங்கள் தவிர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் அந்தந்த மாநில பாஜக தலைவர்கள் வெளியிட இருக்கிறார்களா? என்பதை நான் அறிய விரும்புகிறேன்.  ரபேல் வாட்ச் விவகாரம் ஒன்றும் அவ்வளவு பெரிய செய்தி இல்லை.. இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து நாம் நேரத்தைக் கழிக்க வேண்டிய அவசியமில்லை. நான் வாட்ச் கட்டுவதில்லை, அதற்காக நான் வாட்ச் கட்டுவதில்லை என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றேனா?” என்று கூறினார்.