சுயநலவாதிகளுக்கு மத்தியில் விடுமுறை எடுக்காமல் உழைக்கும் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து- அண்ணாமலை
சொந்த நலனுக்காக விடுமுறையோ ஓய்வு எடுக்காமல், தன் குடும்பத்தினருக்காக ஆதாயம் தேடாமல், நாட்டு மக்களுக்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் 73 வதுபிறந்தநாள். மனதில் உறுதியும், வாக்கினிலே இனிமையும், வாழ்க்கையில் நேர்மையும், ஒளி படைத்த கண்ணும் உறுதி கொண்ட நெஞ்சமாக, நம் இந்திய தேசத்தின் வெற்றிப் பயணத்திற்கு மாலுமியாக வந்தவர் நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். நம் இந்திய மண் மண் பயனுறவும், நிலவில் கூட நம் கால் படவும்... நினைக்க முடியாத சாதனைகள் எல்லாம், நிஜத்தில் செய்து காட்டி அவர் மீது சுமத்தப்பட்ட கேள்விக்குறிகளையெல்லாம்… வியப்பு குறிகளாக மாற்றிக் காட்டிய வித்தகர் நம் பிரதமர்.
அறிவுசார் ஞானியா! அனைத்தும் துறந்த முனியா! தேசத்தின் காவல் தெய்வமா! முன்னேற்றத்திற்கான போராளியா! உலகம் போற்றும் விஸ்வ குருவா! சாமான்ய மக்களின் சங்கடம் தீர்க்க வந்த சரித்திர நாயகனா! இப்படி எல்லாம் உலகத்தின் பத்திரிகைகள் எல்லாம் வியந்து போற்றும் அளவிற்கு நம் நாட்டிற்கு கிடைத்த தன்னலமற்ற நேர்மையான மாபெரும் தலைவருக்கு பிறந்தநாள். அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட குளோபல் லீடர் அப்ரூவல் படி பிரதமர் மோடி அவர்கள் 76 சதவீத புள்ளிகள் பெற்று உலகத் தலைவர்களின் புகழ் வரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாக நம் பிரதமர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 நாடுகளின் மூத்த தலைவர்களை பாரதம் அழைத்து வந்து G20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய அருமைக்குரியவர் நம் பாரத பிரதமர் மோடி அவர்கள். தமிழ் தன் தாய் மொழியாக இல்லையே, தன்னால் தமிழில் பேச முடியவில்லை என்று பலமுறை வருத்தம் தெரிவித்தவர் பிரதமர் மோடி அவர்கள். உலக நாடுகளில் எல்லாம் நம் தமிழ் மொழியின் தொன்மையையும் பெருமையையும் எடுத்துக் கூறி மகிழ்ந்தவர் மோடி அவர்கள்.
நூற்றுக்கும் அதிகமான மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்ட தமிழ் செம்மல் மோடி அவர்கள். திருவள்ளுவருக்கு பிரான்சில் சிலை திறக்க ஏற்பாடுகள் செய்தவர் மோடி அவர்கள். தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாய பாடம் ஆக்கி தமிழ் வழியிலே கல்வி கற்க ஆவன செய்தவர் மோடி அவர்கள்.
பாரதப்பிரதமர் மோடி அவர்களின் நல்லாட்சியில் தமிழகம் 9ஆண்டுகளில் பெற்ற நேரடியான நன்மைகள்
• அனைவருக்கும் வீடு திட்டத்தில் கிராமப்புறத்தில் 7,89,605 வீடுகள், நகர்ப்புறத்தில் 7,05,710 வீடுகள்
• தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டு கழிப்பறைகள் 56,86,979 , பொது பயன்பாட்டிற்கான 6774 கழிப்பறைகள்
• வீடு தோறும் குடிநீர் திட்டத்தின் கீழ் 60,53,007 இணைப்புகள்
• சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டத்தில் பெற்ற விண்ணப்பங்கள் 2,43,092 வழங்கப்பட்ட கடன் 300.84 கோடி ரூபாய்
• ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு இன்சூரன்ஸ் திட்டத்தில் 88,75,227 சிகிச்சைகள்
• அனைவருக்கும் இலவச எரிவாயு திட்டத்தில் 37,06,464 இணைப்புகள்
• தொடங்கப்பட்ட இலவச வங்கி கணக்குகள் 1,43,53,828
• கிராம இளைஞர்கள் வேலைவாய்ப்பு பயிற்சியில் 59,952 பயனாளிகள்
• முத்ரா கடன் திட்டத்தில் பெற்ற விண்ணப்பங்கள் 47,81,567 வழங்கப்பட்ட கடன் 15,496 கோடி ரூபாய்
• தொடங்கப்பட்ட மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் 820
• 6000 ரூபாய் ஊக்கத்தொகை பெற்ற 48,90,911 தமிழக விவசாயிகள்
• தமிழகத்தில் உணவு தானியம் பெற்றவர்கள் 3.64 கோடி மக்கள்
• கொரோனா காலத்தில் தமிழகத்தில் தடுப்பூசி இலவசமாக பெற்றவர்கள் எண்ணிக்கை, முதல் டோஸ் பெற்றவர்கள் 6,12,15,446 இரண்டாம் டோஸ் பெற்றவர்கள் 5,72,21,101, முன்னெச்சரிக்கை டோஸ் பெற்றவர்கள் 90,94,733
தான் கையில் எடுக்கும் ஒவ்வொரு செயலிலும், துல்லியமான திட்டமிடல், தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல்திட்டம், திறமை வாய்ந்த செயலாற்றும் குழுவினர், என்று இவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நம் நாட்டின் நன்மதிப்பையும் புகழையும் பெருமையையும் உயர்த்திக் கொண்டே இருக்கிறது. நான்… என்… எனது… என்ற சுயநலம் மிக்க அரசியல்வாதிகளையே பார்த்து பழகிய தமிழக மக்களுக்கு, நாம்… நம்… நமது… என்று நம்பிக்கை தந்தவர் மோடி அவர்கள். சொந்த நலனுக்காக விடுமுறையோ ஓய்வு எடுக்காமல், தன் குடும்பத்தினருக்காக ஆதாயம் தேடாமல், நாட்டு மக்களுக்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும், நம் மகத்தான தலைவர் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பிலும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.