விஜயகாந்த் நினைவிடத்தில் அண்ணாமலை மரியாதை!

 
annamalai annamalai

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். 

தேமுதிக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல் தலைவர்கள் பலரும் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்றைய தினம், தேமுதிக நிறுவனத் தலைவர், அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நினைவு தினத்தை ஒட்டி, தமிழக பாஜக  மூத்த தலைவர்களுடன், கேப்டன் அவர்கள் நினைவிடத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்தி வணங்கினோம்.  அன்பும், பண்பும், அறமும் மிகுந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள், வெள்ளை மனமும், கனிவான புன்னகையும், கொடுத்துச் சிவந்த கரங்களும், தம் அடையாளமாகக் கொண்டு திகழ்ந்தவர். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ என்ற குறளுக்கு இலக்கணமாக, ஆகச் சிறந்த மனிதராக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்கள் புகழ், என்றும் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.