இசைஞானி இளையராஜாவுக்கு அண்ணாமலை வாழ்த்து..

 
இசைஞானி இளையராஜாவுக்கு அண்ணாமலை வாழ்த்து..


இன்று பிறந்தநாள் காணும் இசைஞானி இளையராஜாவுக்கு , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான  இளையராஜா இன்று தனது 80 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  இதனை ஒட்டி திரைபிரபலங்கள், இசைக்கலைஞர்கள், அரசியல் லட்சித் தலைவர்கள்  பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர்  இளையராஜாவின் அலுவலகத்திற்கு  நேரில் சென்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.  அதேபோல் கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.  

ilayaraja

அந்தவகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது ட்விட்டர் பதிவில், “ ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலமாக, இசையை ஆளும் முடிசூடா மன்னரும், பாராளுமன்ற உறுப்பினருமான இசைஞானி இளையராஜா  அவர்களுக்கு, தமிழக பாஜக  சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைஞானி அவர்கள், இன்று பல கோடி மக்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்தும் இசை மருத்துவராக, நம் தேசத்தின் அடையாளங்களில் ஒருவராக விளங்குவதில் நம் அனைவருக்கும் பெருமையே.

இன்று காலை, இசைஞானி அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானி அவர்கள், நீண்ட ஆயுளுடன் இன்னும் பல ஆண்டுகள் இசையால் இந்த உலகை ஆள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.