நாளையும் டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என அறிவிப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வருகிறது. சென்னைக்கு வடகிழக்கே சுமார் 90 கி.மீ தொலைவில் ‘மிக்ஜாம்’ புயல் உள்ளது. இது தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து நாளை (டிச.5) முற்பகல் நெல்லூர்- மசூலிபட்டினம் இடையே தீவிர புயலாக கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாளை (5.12.2023) அன்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்கனவே இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மிக்ஜாங் புயல் தீவிரமடைந்து கனமழை வெளுத்து வாங்கி வருவதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


