குச்சியால் தாக்கியதில் சிறுமிக்கு காயம்- ஆசிரியை பணியிடைநீக்கம்

 
ச் ச்

கோவையில் சிறுமியை தாக்கி காயம் ஏற்படுத்திய ஆசிரியை  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமியை குச்சியால் அடித்து காயப்படுத்திய ஆசிரியை பெரியநாயகி மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 7-ஆம் தேதி பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, 2-ஆம் வகுப்பு மாணவி ஷாஷினி (வயது 7) என்பவரை ஆசிரியை பெரியநாயகி குச்சியால் தாக்கியதில் சிறுமியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுமியின் காயம் குணமடையாததால், நவம்பர் 21-ஆம் தேதி கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு கிடைத்ததும், போலீசார் விசாரணை நடத்தினர். சூலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் அனுமதி பெற்று, ஆசிரியை பெரியநாயகி மீது வழக்குப் பதிவு செய்தனர். குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவம் குறித்து துறை ரீதியாகவும் விசாரணை நடத்தப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை பெரியநாயகியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார். சிறுமியின் பெற்றோர் ஆரம்பத்தில் புகார் அளிக்கவில்லை என்றாலும், மருத்துவமனை மூலமாக சம்பவம் வெளியானதால் துறை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.