அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த மற்றொரு மாவட்ட செயலாளர் நீக்கம்- ராமதாஸ் அதிரடி
விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார் நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை, குடும்ப விவகாரங்களை வெளிப்படையாக முன்வைத்தார். இந்த சந்திப்பின் போது, பாமகவில் இளைஞர் அணித் தலைவர் பதவிக்கு முகுந்தனை நியமிக்கும் விவகாரத்தில் தாயார் மீது பாட்டில் வீசித் தாக்கினார் அன்புமணி. பாஜகவுடனான கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பவர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து அடுத்தடுத்து நீக்கிவருகிறார் ராமதாஸ்.
அந்தவகையில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து மயிலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். சிவக்குமாருக்கு பதிலாக விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாகவும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.


