வெறி நாய் கடிக்கு மேலும் ஒருவர் பலி!

 
ச் ச்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெறி நாய் கடித்ததில் 50 வயது கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா, 50 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 27 ஆம் தேதி கூலி வேலைக்காக தளி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது வேலை செய்யும் இடத்தில் தெரு நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு இருந்துள்ளது. அந்த சமயம் அங்கு இருந்த மல்லப்பா நாய்களை விரட்டி உள்ளார். அப்போது ஒரு வெறிநாய் மல்லப்பாவின் முகப் பகுதியில் கடித்துள்ளது. இதனால் ரத்த காயத்துடன் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.பின்னர் நலமடைந்து வீடு திரும்பி உள்ளார். நேற்று முன்தினம் மாலை மல்லப்பாவுக்கு தலை சுற்றால் வாந்தி ஏற்பட்டு உள்ளது. அவரை மீண்டும் நேற்று தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு உடல்நிலை மோசமான போது மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ரத்த வாந்தி எடுத்து மல்லப்பா உயிரிழந்தார். மருத்துவ அறிக்கையில் ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு மூளை பகுதியை பாதிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

மல்லப்பா உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் மற்றும் தளி பகுதி வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சிறப்பு ராபீஸ் தடுப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மல்லப்பாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் நேரடியாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளது. அந்த சம்பவம் கிருஷ்ணகிரி மற்றும் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் சுற்றும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் இல்லை எனில் தடுப்பூசி போட வேண்டும் என பொதுமக்கள், அவரின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.