நீட் தேர்வால் மாணவர் தற்கொலை - அரசும் , ஆளுநரும் விரைந்து செயல்பட பாமக கோரிக்கை!!

 
PMK


நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்திற்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

neet

சென்னை அடுத்த புழல் காவல்துறையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்த் . வெளிநாட்டில் வேலை செய்யும் இவருக்கு 19 வயதுடைய சுஜித் என்ற மகன் இருந்துள்ளார் .இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இருப்பினும் இரண்டு முறை தோல்வியடைந்துள்ளார். இந்த முறை குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் மருத்துவ சீட் கிடைக்குமா கிடைக்காதா என்ற கவலையில் இருந்த சுஜித்துக்கு , மருத்துவம் படிக்க எங்கும் இடம் கிடைக்கவில்லை.  இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PMK
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையை அடுத்த புழல் காவாங்கரையை சேர்ந்த சுஜித் என்ற மாணவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாது என்ற கவலையில் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிகிறது. அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், ஆறுதலையும்  தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு அச்சம் மற்றும் தோல்வியால் நடப்பாண்டில் தற்கொலை செய்து கொண்ட ஏழாவது மாணவர் சுஜித் ஆவார். மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது. மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் ஒரே தீர்வு. ஆனால், அதற்கான தமிழக அரசின் சட்டத்திற்கு இன்னும் ஆளுனரின் ஒப்புதல் கூட பெறப்படவில்லை. இந்த நிச்சயமற்ற நிலை  நீடிக்கக் கூடாது. இன்னும் சில மாதங்களில் அடுத்தக் கல்வியாண்டு தொடங்கப் போகிறது. அதற்குள்ளாக நீட்  விலக்கு பெற்றாக வேண்டும்.  அதற்கான சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்! " என்று கேட்டுக்கொண்டுள்ளார்.