தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி!

 
ttn

சென்னையில் குடியரசு தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு,தமிழ்நாடு அரசிடம் ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்தது.

நாடு முழுவதும் நேற்று 73 ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னையில் நேற்று ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் அவமதித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று அதிகாரிகள் வாதிட்டுள்ளனர்.  இதற்கான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.

ttn

தமிழ்த்தாய்வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து பாடல் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது.  அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ,அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளின் போதும் தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கப்படாமல், பாடப்பட வேண்டுமென்றும் , அப்படி பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க  வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணையின்படி இதிலிருந்து விலக்கு அளிக்க படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

ttn

அதன்படி தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல்,  தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு அவமரியாதை செய்ததாக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,  இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.  அத்துடன் அரசியல் கட்சிகள் பல ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சென்னையில் குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசிடம் வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி.  நிதி அமைச்சர் பி. டி .ஆர். பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து ஆர்பிஐ மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி  வருத்தம் தெரிவித்துள்ளார்.  ரிசர்வ் வங்கி அதிகாரிகள் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.