“நயினார் நாகேந்திரன் உண்மை முகத்தை காட்டிவிட்டார்”- அப்பாவு
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் உண்மையான முகத்தை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காட்டிவிட்டார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட சிலம்பம் கமிட்டி மற்றும் மேலப்பாளையம் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழக சபாநாயகர் அப்பாவு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சொல்வதற்கு யுஜிசிக்கு அதிகாரம் கிடையாது. பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை மட்டுமே யுஜிசி வழங்க முடியும். அதனை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை. மாநிலத்தால் இயங்கும் பல்கலைக்கழகத்தின் முழு உரிமை. உச்ச நீதிமன்றம் யுஜிசி உத்தரவிடும் அதிகாரம் கிடையாது என தெளிவாக கூறிவிட்டது. பல்கலைக்கழகத்திற்கு மானியம் கொடுப்பதுதான் அவர்களது பணி. ஆனால் அதை விட்டு மீதிப் பணிகளை யுஜிசி செய்கிறது.
ஒன்றிய அரசின் ஏவலர்களாக சிபிஐ வருமானவரித்துறை அமலாக்கத்துறை போன்றவை இருந்த நிலையில் இப்போது தேர்தல் ஆணையமும் யுஜிசியும் வந்துவிட்டது. பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ஒரு முகம் மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னொரு முகம் அவரிடம் இருப்பதை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காட்டிவிட்டார். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மெட்ரோ ரயில் தேவை அதை சொல்வதை விட்டுவிட்டு நயினார் நாகேந்திரன் மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன நியாயம் உள்ளது. தமிழகத்தில் கலவர பூமியாக மாற்ற நினைத்தால் அது நடக்காது. எந்த சலசலப்புக்கும் தமிழக அரசு அஞ்சாது” என்று கூறினார்.


