ஆவின் நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்பாடுகளை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?

 
ponnusamy

ஆவின் நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்பாடுகளை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? என்று பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டத்தில் ஆவின் நிர்வாகத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளின் அடிப்படையில் "ஆவின் பால் லிட்டருக்கு 5.00ரூபாய் விலை உயர்வு" என முன்னணி நாளிதழ் ஒன்று (தினமலர்) செய்தி வெளியிட்ட நிலையில் ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து அதனை மறுத்து கடுமையான எதிர்வினையாற்றப்படுகின்றது. ஆவின் பால் விலை உயர்வு குறித்து அரசு மற்றும் மக்களின் கவனம் பெறக்கூடிய வகையில் அந்த முன்னணி நாளிதழ் வெளியிட்ட பொதுவான தலைப்பு வேண்டுமானால் தவறாக இருக்கலாமே தவிர அதில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் அடிப்படை ஆதாரம் இருக்கிறது என்பதை எவரும் மறந்து விடக் கூடாது.  ஏனெனில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனங்கள் தான் நேரடியாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தாமல் மறைமுகமாக உயர்த்திட நூதனமான வழிமுறைகளை கையாண்டு வருகின்றன. குறிப்பாக தேனீர் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் 1லிட்டர் பால் பாக்கெட்டில் 50மிலியை குறைத்து 950மிலியாகவும், நுகர்வோருக்கான 500மிலி பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளில் 25மிலி, 50மிலியை குறைத்து 475மிலி, 450மிலியாக மாற்றி அதே பழைய விற்பனை விலையில் வழங்கி, மக்கள் தலையில் மறைமுகமாக விற்பனை விலையை சுமத்துகின்றன. அதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10.00ரூபாய்க்கு வழங்கிய 200மிலி பால், 200கிராம் தயிரின் அளவுகளை 180, 160, 150, 130மிலி/கிராம் என பாக்கெட்டின் நிகர அளவுகளை குறைத்த நிலையில் தற்போது பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை 120மிலி/கிராம் நிகர அளவாக்கி அதனை 10.00ரூபாய்க்கு கொண்டு வந்து விட்டன. தனியார் பால் நிறுவனங்களை தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசின் கையை விட்டுப் போய் விட்டதால் அவை இது போன்ற தன்னிச்சையான முடிவுகளை எடுத்து தமிழக மக்களை வஞ்சித்து வருகின்றன.

aavin

அந்த வகையில் தற்போது தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினும் தனியார் பால் நிறுவனங்களின் வரிசையில் இணைந்து மாநில அரசின் கட்டுப்பாட்டை மீறி செயல்படத் தொடங்கி விட்டது. அந்த வகையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஏற்கனவே ரூபாய் 11.25க்கு விற்பனை செய்யப்பட்ட 250மிலி நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டில் 50மிலி அளவை குறைத்து, 200மிலி நிகர அளவாக்கி, அதற்கு 10.00ரூபாய் என விற்பனை விலையாக நிர்ணயித்திருப்பதன் மூலம் நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கு மறைமுகமாக லிட்டருக்கு 5.00ரூபாய் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மாவட்ட ஒன்றியங்களின் ஆவின் பொது மேலாளர்கள் சர்வ வல்லமை பொருந்தியவர்களாக கருதி, அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளை எல்லாம் தாங்களே எடுத்து, மக்களுக்கு விரோதமாக, சர்வாதிகாரமாக செயல்படத் தொடங்கி விட்டனர். தனியார் பால் நிறுவனங்களைப் போல தன்னிச்சையாக செயல்படத் தொடங்கியிருக்கும் ஆவின் மாவட்ட நிர்வாகங்களை தமிழக அரசும், ஆவின் நிர்வாக இயக்குனரும் கண்டு கொள்ளாமல் இருப்பது வியப்பிற்குரியதாக இருக்கிறது. மேலும் தமிழகத்தில் தினசரி விற்பனையாகும் சுமார் 29லட்சம் லிட்டர் ஆவின் பாலில் 60% அளவிற்கு 4.5% கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளே விற்பனையாகி வரும் சூழலில் அதன் விற்பனையை குறைக்கக் கூடிய வகையில்  அவ்வகையான பாலில் 1% கொழுப்பு சத்தை குறைத்து 3.5%கொழுப்பு சத்துள்ள பாலினை, பதப்படுத்தப்பட்ட "பிரிமியம் பசும்பால்" என்று சென்னையிலும், அதே பாலினை "டிலைட் பதப்படுத்தப்பட்ட பால்" என்கிற பெயரில் சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களிலும் "ஊதா" நிற (வைலட்) பாக்கெட்டில் புதிது போல அறிமுகம் செய்து, பச்சை நிற பால் பாக்கெட்டின் விற்பனை விலையான ஒரு லிட்டர் 44.00ரூபாய் / 45.00ரூபாய் என்கிற விலைக்கு வழங்கி ஒரு லிட்டர் ஆவின் பாலுக்கு 8.00ரூபாய் மறைமுக விலை உயர்வை மக்கள் தலையில் சுமத்தியிருக்கிறது ஆவின் நிர்வாகம். 

aavin milk

அவ்வாறு மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்தி விட்டு, பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சுமார் 40%வரை குறைத்து, கொழுப்பு சத்து குறைவான, அந்த வகை பாலினை தான் வாங்கியாக வேண்டும் என பால் முகவர்களையும், நுகர்வோரையும் கட்டாயப்படுத்தி வருவதை ஏற்கனவே தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ச்சியாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதோடு, ஆவின் நிர்வாகத்தின் மக்கள் விரோத, சர்வாதிகார போக்கினை வன்மையாகக் கண்டிக்கவும் செய்துள்ளது. (தற்போது பால் கொள்முதல் விலை அடிப்படையில், நிலைப்படுத்தப்பட்ட பாலில் குறைக்கப்பட்ட 1%கொழுப்பு சத்தின் அடக்க விலை என்பது 7.80 முதல் 8.00ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.)மேலும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பாலில் (Double Toned Milk) 1.5%Fat - 9.0%SNF, சமன்படுத்தப்பட்ட பாலில் (Toned Milk) 3.0%Fat - 8.5%SNF, நிலைப்படுத்தப்பட்ட பாலில் (Standardized Milk) 4.5%Fat - 8.5%SNF, நிறைகொழுப்பு பாலில் (Full Gream Milk) 6.0%Fat - 9.0%SNF மற்றும் பசும்பாலில் 3.5%Fat - 8.5%SNF இருக்க வேண்டும் என்பது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) நிர்ணயித்திருக்கிற நிலையில் ஆவின் நிர்வாகமோ மக்களை குழப்பக் கூடிய வகையில், ஒரே ஊதா நிற பாக்கெட்டின் முன்புறம் சென்னையில் "பிரிமியம் பசும்பால், பதப்படுத்தப்பட்டது" என்றும், சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் "டிலைட், பதப்படுத்தப்பட்ட பால்" என்றும் குறிப்பிட்டு, இரண்டு பெயர்களில் அறிமுகம் செய்து விட்டு, அந்த பால் பாக்கெட்டின் பின்புறத்தில் "Toned Milk" என போட்டிருப்பது மக்களையும், FSSAIயும் ஏமாற்றுகிற செயலாகவே தெரிகிறது. ஏனெனில் "Toned Milk" என்பது 3.0% கொழுப்பு சத்து, 8.5%திடசத்து கொண்டது எனும் போது பாக்கெட்டின் முன்புறத்தில் 3.5%கொழுப்பு சத்து, 8.5%திடசத்து  என குறிப்பிட்டு விட்டு, பின்புறத்தில் 0.5% குறைவான அதாவது 3.0% கொழுப்பு சத்து கொண்ட பாலினை குறிக்கும் "Toned Milk" என குறிப்பிட்டிருப்பது அதனை உறுதி செய்வதாக இருக்கிறது.

Aavin

கொழுப்பு சத்து அளவை 1% குறைத்து பொதுமக்கள் தலையில் மறைமுகமாக லிட்டருக்கு 8.00ரூபாய் பால் விற்பனை விலையை உயர்த்துவதை கடந்த பிப்ரவரி கோவையிலும், மார்ச் மாதம் நெல்லை, தூத்துக்குடியிலும், மே மாதம் சென்னையிலும் தொடங்கி வைத்து நடைமுறைப்படுத்திய ஆவின் நிர்வாகம் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்தி, அந்த மறைமுக விற்பனை விலை உயர்வை அரசின் அறிவிப்பின்றி உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டது. இந்த நிலையில் தற்போது 250மிலி பால் பாக்கெட்டின் அளவையும் தனியார் பால் நிறுவனங்களைப் போல தன்னிச்சையான முடிவெடுத்து, அதன் அளவையும் குறைத்து அதிலும் மறைமுகமான விற்பனை விலை உயர்வை ஒவ்வொரு மாவட்டங்கள் வாரியாக அமுல்படுத்த தொடங்கியுள்ள ஆவின் நிர்வாகத்தின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் உதாரணமாக திகழ்வதாக திமுக மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும், எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகளை உறுதி செய்கின்ற வகையிலும், பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல், ஆவின் பால் விற்பனை விலையை  நேரடியாக உயர்த்தினால் பொதுமக்கள் கொதித்தெழுந்து விடுவார்கள், எதிர்க்கட்சிகளும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கமும் கடுமையான எதிர்வினையாற்றுவார்கள், அது 2024ல் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை மனதில் கொண்டு ஆவின் பால் விற்பனை விலையை நேரடியாக உயர்த்தாமல் மறைமுகமாக உயர்த்தி, ஆவின் நிர்வாகம் மக்களை ஏமாற்றி, வஞ்சித்து வருகின்றது, அதனை திமுக அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பதை வைத்துப் பார்க்கும் போது திமுக மீதான எதிர்கட்சிகளின் விமர்சனம் உண்மை தான் என  ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. பின் குறிப்பு :- இந்த ஆவின் பால் மறைமுக விற்பனை விலை உயர்வு மூலம் ராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் பால் குளிரூட்டும் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட *உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனம் கலப்படம் விவகாரத்தை மூடி மறைத்தது ஆவின் நிர்வாகம்.* என்று குறிப்பிட்டுள்ளது.