கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா ? சென்னை போட்டிக்கு டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது. இந்தாண்டு நடைபெறவுள்ள 18வது ஐபிஎல் சீஸனின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற மார்ச் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது.
தொடர்ந்து மார்ச் 23 ஆம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. மாலை நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. ஐபிஎல்லின் எல் கிளாஸிகோ என்று வர்ணிக்கப்படும் சிஎஸ்கே - எம்ஐ அணிகள் போட்டிக்கு ரசிகர்களிடையே எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
இரு அணிகளுக்கும் அது முதல் போட்டியாக அமைந்துள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் வருகிற மார்ச் 19 ஆம் தேதி தொடங்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி வருகிற மார்ச் 19 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ இணையதளமான www.chennaisuperkings.com என்கிற இணையதளத்தில் விற்பனை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2025 சீசனில் சென்னை அணி மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நாளை மறுநாள் (மார்ச் 19) காலை 10.15 மணிக்கு தொடங்கும். டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள கேட்டில் மட்டும் நுழைய வேண்டும். ஒருவருக்கு தலா இரண்டு டிக்கெட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே உங்கள் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்தி விட வேண்டும். கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம், சென்னை பல்கலைக்கழகம், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகம், ரயில்வே கார் பார்க்கிங், விக்டோரியா ஹாஸ்டல் ஆகிய பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். பார்க்கிங் வசதி குறிப்பிட்ட அளவுக்கே இருப்பதால் மெட்ரோ மற்றும் மாநகர பேருந்துகளில் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட எந்த பொருளும் மைதானத்துக்குள் அனுமதி இல்லை. சிகரெட், புகையிலை உள்ளிட்ட பொருள்களுக்கும் அனுமதி இல்லை. அனைத்து இடங்களிலும் இலவசமாக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வெளி உணவுகள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. செல்ல பிராணிகளுக்கும் அனுமதி இல்லை.
மாலை 5.30 மணியில் இருந்து கேட் திறக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்காக தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. C/D/E ஆகிய லோயர் பிரிவு இருக்கைகளுக்கு ரூ.1,700, I/J/K ஆகிய அப்பர் பிரிவு இருக்கைகளுக்கு ரூ.2,500, I/J/K லோயர் இருக்கைகளுக்கு ரூ.4,000, C/D/E அப்பர் பிரிவு இருக்கைகளுக்கு ரூ.3,500 மற்றும் KMK Terrace பிரிவு இருக்கைகளுக்கு ரூ.7,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளனர்.