நீங்கள் என்ன வரலாற்று ஆய்வறிஞரா? கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும் - கர்நாடக ஐகோர்ட் உத்தரவு..
நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. நாளை மறுநாள் ( ஜூன் 5) இந்தப்படம் வெளியாக உள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து பிரிந்தது தான் உங்கள் கன்னட மொழி’ என கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து கூறினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கன்னட மொழியை கமல்ஹாசன் அவமதித்துவிட்டதாகக் கூறி கர்நாடக அரசியல்வாதிகள் , பல்வேறு அமைப்புகள், கன்ண்ட திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்காவிட்டால் தக் லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட விட மாட்டோம் எனக்கூறி பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்புக் கேட்கா விட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது என தெரிவித்து விட்டது. இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில், தக் லைப் படம் வெளியாகும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த கர்நாடக ஐகோர்ட், கமல்ஹாசனுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. “நீங்கள் (கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வறிஞரா? மொழியியல் வல்லுநரா? தமிழில் இருந்து கன்ண்டம் பிறந்தது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? பிரச்சனைக்கு காரணமே கமலின் பேச்சுதான். மன்னிப்பு கேட்க முடியாது என்று வேறு கூறியுள்ளார். கர்நாடக மக்களின் உணர்வுகளை கமல் புண்படுத்தியுள்ளார்.
வணிக ஆதாயம் மட்டும் வேண்டும் என இப்போது தக் லைஃப் படத்திற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளீர்கள். ஒரு மன்னிப்பு கேட்டாலே பிரச்சனை தீர்ந்துவிடும். மன்னிப்பு கேட்க முடியாது.. ஆனால் உங்கள் படம் மட்டும் கர்நாடகத்தில் ஓட வேண்டுமா? மன்னிப்பு கேளுங்கள் அப்போது தான் இங்கிருந்து சிலகோடிகளை உங்களால் சம்பாதிக்க முடியும் 2.30 மணிக்குள் ஒரு முடிவை கமல் தரப்பு கூற வேண்டும். பிறகு என்னுடைய தீர்ப்பை அறிவிக்கிறேன்” என்று நீதிபதி தெரிவித்தார்.


