பிடிபட்ட அரிசிக்கொம்பன் யானை.. 10 நாட்களுக்கு பிறகு கம்பத்தில் 144 தடை நீக்கம்..

 
பிடிபட்ட அரிசிக்கொம்பன் யானை.. 10 நாட்களுக்கு பிறகு கம்பத்தில் 144 தடை நீக்கம்..


கம்பம் பகுதியில் 11 நாட்களாக பிடிபடாமல் போக்கு காட்டி வந்த அரிசி கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதனால் அங்கு போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மூணாறு அருகே 11 பேரைக் கொன்ற அரிசி கொம்பன் யானை கடந்த மாதம் 26 ஆம் தேதி கூடலூர் வழியாக கம்பம் பேரூராட்சி பகுதிக்குள் நுழைந்தது. இதில் யானை தாக்கி படுகாயம் அடைந்த ஒருவர் உயிரிழந்தார்.  இதனை தொடர்ந்து யானையைப் பிடிக்க தனி குழு அமைத்து வனத்துறையினர் தீவிரமாக யானையை கண்காணித்து வந்தனர.  பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது.  ஆனால் அரிசி கொம்பன் யானை, சுருளி வனப்பகுதி,  சண்முகா நதி அணை பகுதி,  சின்ன ஓவலாபுரம் என இடம் விட்டு இடம் மாறி போக்கு காட்டி வந்ததால் அதை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

அரிசி கொம்பன்

நேற்று இரவு சின்ன ஓவலாபுரம் பகுதியில் உள்ள சமதள பகுதியான வனப்பெருமாள் கோவில் அருகே யானை முகாமிட்டிருந்ததை  கண்காணித்த வனத்துறையினர் மருத்துவ குழு உதவியுடன் அடுத்தடுத்து மூன்று ஊசிகளை செலுத்தி யானையை மயக்கமடைய செய்தனர்.  தொடர்ந்து யானையின் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போடப்பட்டு,  மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் அரிசி கொம்பன் யானையை லாரியில் ஏற்றி கம்பம் வனச்சராக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

லாரிகள் ஏற்றிச் செல்லப்பட்ட அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடுவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே யானை பிடிப்பட்டதை அடுத்து கம்பம் சுற்றுவட்டார பகுதி மக்கள்  நிம்மதி அடைந்தனர். அத்துடன்  கம்பம் பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதால் அங்கு அமலில் இருந்த 144 தடை உத்தரவு விலகிக் கொள்ளப்பட்டுள்ளது..