ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : வழக்கறிஞர் பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜர்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 22 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருக்கிறனர்.
கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணையில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களையும் காவலில் எடுத்து விசாரித்து வரும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஏற்கனவே பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனுக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து வழக்கில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாஜக வழக்கறிஞரான பால் கனகராஜுடம் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக வழக்கில் தொடர்புடைய ரவுடிகளான சாம்போ செந்தில், நாகேந்திரன் ஆகியோருக்கு வழக்கறிஞராக பால் கனஜராஜ் இருந்துள்ளார் என்பதால், அவரிடம் விசாரனை நடத்தினால்,
இந்த கொலை வழக்கில் ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கலாம் என்கிற அடிப்படையில் அவரை அழைத்த விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் பின்புறம் உள்ள அலுவலகத்தில் வழக்கறிஞர் பால் கனகராஜ் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை விசாரணை அதிகாரிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். அவருடைய செல்போன் அழைப்புகள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றையும் ஆராய திட்டமிட்டுள்ளனர். வடசென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் பால் கனகராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.