ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை! முழு பின்னணி

 
armstrong death

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம்தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீடு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா, குன்றத்தூர் திருவேங்கடம் சந்தோஷ், செல்வராஜ் திருமலை உள்பட 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்திருந்தனர்.

Image

இந்த நிலையில் கொலையாளிகள் 11 பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். கொலையாளிகளில் ஒருவரான குன்றத்தூர் திருவேங்கடத்தை வழக்கு விசாரணை தொடர்பாக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். மாதவரம் ஆடு தொட்டி அருகே சென்றபோது போலீசாரின் பிடியிலிருந்து திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார்.

இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.இந்த நிலையில் புழல் வெஜிடேரியன் நகரில் காலி மனையில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டாயில் திருவேங்கடம் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கொலையாளிகள் அடிக்கடி கூடி சதித் திட்டம் தீட்டிய இடங்களில் இந்த இடமும் ஒன்று என கூறப்படுகிறது. போலீசார் திருவேங்கடத்தை சுற்றி வளைத்த போது, தான் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து  போலீசாரை நோக்கி சுட்டார்.

இதையடுத்து தனிப்படை காவல் ஆய்வாளர்  முகமது புகாரி ரவுடி திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட்டார் . இதில் வலது பக்க வயிறு மற்றும் இடது மார்பில் குண்டுகள் பாய்ந்து திருவேங்கடம் சுருண்டு விழுந்தார். அவரை மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காவல்துறை உயர் அதிகாரிகள் என்கவுண்டர் நடந்த இடம் மற்றும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ரவுடியின் சடலத்தை பார்வையிட்டனர்.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட குன்றத்தூர் திருவேங்கடம், தாமரைப்பாக்கம் கூட்ரோட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான புளியந்தோப்பு தென்னரசு கொலை வழக்கு உட்பட 3 கொலை வழக்குகள், மேலும் சில வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்தனர். உணவு டெலிவரி பாய் போல பெரம்பூர் பகுதியில் பத்து நாட்களாக சுற்றித்திரிந்து ஆம்ஸ்ட்ராங்கின் ஒவ்வொரு நடவடிக்கையையும்  கண்காணித்து, கச்சிதமாக கொலை திட்டத்தை செயல்படுத்த முக்கிய பங்கு வகித்தவர் என போலீசார் தெரிவித்தனர்.