நாளை 16-வது நாள் காரியம்.... ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி நடக்கலாம்- உளவுத்துறை எச்சரிக்கை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட 16-வது நாளில் பழிக்குப் பழி கொலை என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கிடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 11 பேரையும் போலீஸ் காவலில் விசாரித்த போது திருவேங்கடம் என்பவர் தப்பிச்சென்ற நிலையில் அவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில் போலீஸ் காவல் முடிந்து பத்து பேரை நேற்று பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைத்தனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்த நிலையில் இந்த சம்பவத்தில் பெண் வக்கீல் மலர்கொடி உட்பட மேலும் மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டதாக அஞ்சலை மற்றும் செந்தில் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் 16-ஆம் நாள் காரியம் நாளை நடைபெறவுள்ளது. இதையடுத்து நாளை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழியாக மேலும் ஒரு கொலை அரங்கேறலாம் என்றும், கொலைக்கு காரணமானோருக்கு நெருக்கமானவர்கள் யாராவது கொல்லப்படலாம் எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமானவர்களை பழி தீர்க்க வேண்டும் என்று சபதம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.