ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் கூவம் ஆற்றில் கண்டெடுப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன் ஆயுதங்களை இரண்டாவது நாளாக கூவம் ஆற்றில் இறங்கி மெரினா கடற்கரை மீட்புக் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டதில் மேலும் ஒரு செல்போன் சிக்கியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரின் வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அருள், திருவேங்கடம், ராமு கொலைக்கு சதி திட்டம் தீட்டிய முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முன்னாள் அதிமுக நிர்வாகி மலர்கொடி, தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஹரிகரன் உள்ளிட்ட 15 பேரை போலீசார் இந்த வழக்கில் கைது செய்திருந்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் போலீசார் கஸ்டடியை எடுத்து விசாரணை மேற்கொண்ட போது போலீசாரை தாக்கி விட்டு ஓட முயற்சித்த போது ரவுடி திருவங்கடத்தை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
திடீர் திருப்பமாக இந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்களை துண்டு துண்டாக உடைத்து திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் பகுதியில் ஓடும் கூவம் ஆற்றில் வீசிய கடம்பத்தூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரணையை நேற்றைய தினம் போலீசார் கைது செய்தனர். அவர் ஆற்றில் வீசிய இடத்தில் நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரை மீட்பு குழுவினர் நீரில் மூழ்கி தேடுதலில் ஈடுபட்டதில் 4 செல்போன்களின் பாகங்கள் மட்டும் தனித்தனியாக கிடைக்கப்பெற்றது. இரவு நேரம் ஆனதால் மீண்டும் தேடுதலை தள்ளி வைத்து இன்று காலை மீண்டும் கூவம் ஆற்றில் மெரினா கடற்கரை மீட்புக் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டு இருந்தனர். அதில் 6 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மேலும் மற்றொரு செல்போனின் பாகங்கள் கிடைக்கப்பெற்றது. அதைத் தொடர்ந்து தேடுதல் பணியை மீட்பு குழுவினர் நிறைவு செய்தனர்.