2வது மனைவி வீட்டில் பதுங்கி இருந்த சீசிங் ராஜா! போலீசை கண்டதும் தப்பியோட்டம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜா, ஆந்திராவில் காவல்துறையினரை கண்டதும் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது தப்பியோட முயன்ற திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அதன்பிறகு 10 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ் ஹரிதரன், என மேலும் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜா, ஆந்திராவில் காவல்துறையினரை கண்டதும் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் 2-வது மனைவி வீட்டில் பதுங்கியிருந்த சீசிங் ராஜா, காரில் தப்பியோடியதாக கூறப்படுகிறது. காரின் பதிவெண்ணை வைத்து சீசிங் ராஜாவை தனிப்படை போலீஸ் மும்முரமாக தேடுகிறது. சரித்திர பதிவேடு குற்றவாளியான சீசிங் ராஜா மீது கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன