ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- மேலும் 3 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாகவும், யார் யாருக்கெல்லாம் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது என்பது குறித்தும், விசாரணை மேற்கொண்டு வந்ததில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியமாக சென்னையின் பிரபல ரவுடிகள் மூன்று பேர் தொடர்பு இருப்பதாக கருதி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18- வது நபராக சென்னை பெரம்பூரை சேர்ந்த எஸ்.ஐ. மகனும், ஊர்க்காவல் படையில் பணிப்புரிபவருமான பிரதீப் கைது செய்யப்பட்டார். இவர் ஆற்காடு சுரேஷ் உறவினர் என கூறப்படுகிறது.
இந்த கொலை வழக்கை பொறுத்தவரையில் இரண்டு பின் தாதாக்கள், ஐந்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கோடம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.