ஆம்ஸ்ட்ராங் கொலை : கைதான 26 பேர் அறிவுரைக் கழகத்தில் இன்று ஆஜர்.. கலெக்டர் ஆஃபீஸில் பலத்த பாதுகாப்பு..
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், வழக்கறிஞர் அருள், சிவசக்தி, ஹரிஹரன், மலர்க்கொடி, அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், ரவுடி நாகேந்திரன் , ரவுடி புதூர் அப்பு , சீசிங் ராஜா உள்ளிட்ட 28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேருக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் குமார், விஜயகுமார் மற்றும் திருவள்ளூர் நத்தமேடு நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்களையும் கடந்தவாரம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் 26 பேர் இன்று அறிவுரை கழகத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 26 பேரும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆகர் படுத்தபடவுள்ளதால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.