ஆம்ஸ்ட்ராங் கொலை : அஸ்வத்தாமனிடம் கிடுக்குப்பிடி விசாரணை.. காவல்துறை கேட்பது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், காங்கிரஸை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன், சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் உள்ளிட்ட 23 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருக்கிறனர்.
கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணையில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களையும் காவலில் எடுத்து விசாரித்து வரும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதை அடுத்து புதுப்பேட்டையில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அஸ்வத்தாமனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரிடம், எந்த விவகாரத்தில் அவருடன் மோதல் போக்கு ஏற்பட்டது?
ரியல் எஸ்டேட் தொழிலில் மோதல் போக்கு ஏற்பட்டதா?
நிறுவனங்களில் மாமூல் வசூலிக்க ஆம்ஸ்ட்ராங் இடையூறாக இருந்தாரா?
எந்த விவகாரத்தில், எத்தனை ஆண்டுகளாக உங்கள் தரப்புக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது?
ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியது உண்மையா?
நாகேந்திரனை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினீர்களா?
கொலையாளிகளை எப்படி ஒருங்கிணைத்தீர்கள்?
அவர்களுக்கு யார் யார் மூலமாகப் பணம் விநியோகம் செய்யப்பட்டது?
எத்தனை முறை ஆம்ஸ்ட்ராங்கை சந்தித்து பஞ்சாயத்து பேசினீர்கள்?
துப்பாக்கியை காட்டி ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டினீர்களா?
இந்தக் கொலையில் அரசியல் பின்புலம் உள்ளதா? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அஸ்வத்தாமனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அளிக்கும் பதிலை வீடியோவாகவும் பதிவு செய்து வருகின்றனர்.