“ஆம்ஸ்ட்ராங் கொலை- எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் செல்வப்பெருந்தகையின் மீது பொய் புகார்”

 
செல்வ பெருந்தகை

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக நேற்றைய தினம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலபொது செயலாளர் ஜெய்சங்கர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்று அனுப்பிய நிலையில் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெய்சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை : அஸ்வத்தாமனிடம் கிடுக்குப்பிடி விசாரணை.. காவல்துறை கேட்பது என்ன?

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு  தலைவர் சந்திரமோகன் புகார் அளித்தார். புகார் அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரமோகன், “ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் செல்வபெருந்தகை ஒரு கொலையாளி என்றும் சொத்து ஆதாயத்திற்காக ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட் மற்றும் பிபிஜி சங்கர் ஆகியோரின் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது போன்ற வழக்குகளில் எப்ஐஆரில் கூட அவர் பெயர் இல்லை. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஆதாரமும் இல்லாமல் பழி வாங்கும் நோக்கத்தோடு அரசியல் லாபம் பெறும் நோக்கத்தோடும் சட்ட விதிகளுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் அந்த கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகம் இருந்ததால் அதை காவல் ஆணையரிடம் தெரிவித்திருக்க வேண்டும். எதற்காக கடிதம் எழுதி கட்சியின் தலைமைக்கு அனுப்ப வேண்டும், யாரோ பின்னால் இருந்து செயல்படுகிறார்கள். பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பது குறித்து போலீசார் கண்டறிய வேண்டும். புகார் அளித்த ஜெய்சங்கர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அஸ்வத்தாமன் செல்வபெருந்தகைக்கு நெருக்கமாக இருந்தார் என்பது உண்மையே! கட்சியின் மாநில பொறுப்பில் உள்ள நபர்களின் அனைவரிடமும் தலைவர் நெருக்கமாக தான் இருப்பார்.ஆனால் தவறு செய்யும் பட்சத்தில், அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார். உடனடியாக கட்சியை விட்டு அஸ்வத்தாமன் நீக்கினார்.

செல்வப் பெருந்தகை
இது தொடர்பாக செல்வபெருந்தகை ஆன்லைன் மூலமாக காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளதார். மேலும் அவதூறு பரப்பும் வகையில்பொய் புகார் அளித்த ஜெய்சங்கர் மீது 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம்”என தெரிவித்தார்.