ஆருத்ரா மோசடி வழக்கு : நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு நோட்டீஸ்..

 
ஆருத்ரா மோசடி  வழக்கு :  நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு  நோட்டீஸ்..

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த  ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ. 2,438 கோடி  மோசடி செய்ததாக புகார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தை அடுத்து,  அதனை நம்பி  லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தாமல் அந்த நிறுவனம் மோசடி செய்துள்ளது.  இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில்  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆருத்ரா

இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை விசாரித்து வருகிறது.  புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவன  மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாகினர். அதேநேரம், ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநரும் பாஜக நிர்வாகியுமான ஹரீஷ் , ரூசோ மற்றும்  மாலதி ஆகியோரை கைது செய்து போலீஸார்  நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

rk suresh
 
ரூசோவிடம்  நடத்திய விசாரணையில், நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கும் மோசடியில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.  இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக ஆர்.கே.சுரேஷிடம் ரூ. 12 கோடி கொடுத்ததாக கூறியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட சுரேஷ் அத்துடன் ஏமாற்றி விட்டதாகவும் ரூசோ வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.  இந்த  வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்திருந்தனர். ஆனால் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பிச் சென்றார். இதனையடுத்து  ஆர்.கே.சுரேஷுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.  வீட்டிற்கு சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரது வீட்டில் நோட்டீசை வழங்கினர்.