அஜித் ரசிகர்களால் கொலைமிரட்டல் - ஜாகுவார் தங்கம் போலீசில் புகார்

 
அஜ்

அந்த சம்பவம் நடந்து 11 ஆண்டுகள் ஆகின்றன.  ஆனால் அஜித் ரசிகர்களால் இன்றைக்கும் தனக்கு மிரட்டல்கள் வருகின்றன என்று சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம். 

 கடந்த 2010ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் திரைப்பட கலைஞர்கள் சார்பில் நடந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய நடிகர் அஜித்குமார்,  எங்களை நிகழ்ச்சியில் பங்கேற்க சொல்லி கட்டாயப் படுத்துகிறார்கள் மிரட்டுகிறார்கள்.  எங்கள் தொழிலை செய்ய விடுங்கள் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தார். 

ஜ்

உடனே,  நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி அதற்கு ஆதரவு தெரிவித்தார்.   கருணாநிதி முன்பாகவே அன்றைக்கு அஜித் அவ்வாறு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்ததை அடுத்து,  அஜித்குமார் கருணாநிதியை சந்தித்து விளக்கம் அளித்தார்.  அதன்பின்னர் அஜித்குமாரை கருணாநிதியும் பாராட்டியிருந்தார்.

அது குறித்து அப்போது பேசி இருந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்,    எங்கிருந்தோ பிழைக்க வந்த அஜித் போன்றவர்கள் மனம் போன போக்கில் பேசக்கூடாது.  அவரது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

 இதனால் கொந்தளித்த அஜித் ரசிகர்கள்,  17. 2. 2010 அன்று இரவு சென்னை கே.கே. நகரில் இருந்த ஜாகுவார் தங்கத்தின் வீட்டிற்கு முன்பாக திரண்டு அவரது காரை அடித்து நொறுக்கினர்.  ஆனாலும் அதன் பின்னரும் ஜாகுவார் தங்கம்,  அஜித் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.  அவரை யார் மிரட்டினார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்  என்று  தொடர்ந்து சொல்லி வந்தார்.  அதன் பின்னர் 2011ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வரானார்.

த்

 இந்த நிலையில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனக்கு தொடர்ந்து அஜித் ரசிகர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்திருக்கிறார் ஜாகுவார் தங்கம்.   அந்த புகார் மனுவில்,   1600 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறேன்.  எனக்கு செல்போனில் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன.  அஜித் ரசிகர்களை எனக்கு எதிராக தூண்டி விடுகிறார்கள்.  கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.