அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் உரிமை ஆளுநருக்கு கிடையாது - சபாநாயகர் அப்பாவு

 
appavu

அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் உரிமை ஆளுநருக்கு கிடையாது என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குவதாக நேற்று இரவு ஆளுநர் அலுவலகம் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட  பல்வேறு தலைவர்கள்  ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக சாடி வருகின்றனர். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் உரிமை ஆளுநருக்கு கிடையாது என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் ஒருவருக்கு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்பதை நான்கரை மணி நேரத்தில் தெரிந்துகொண்டனர். அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் உரிமை கவர்னருக்கு கிடையாது. ஆளுநருக்கு எந்தெந்த உரிமைகள் உள்ளது என்பதை சமீபத்தில் கூட  உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. யாரெல்லாம் அமைச்சராக செயல்படுவார்கள் என்ற பரிந்துரையை முதல் அமைச்சர் ஆளுநரிடம் கொடுப்பார். அந்த பரிந்துரையை ஏற்று கவர்னர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். அவ்வளவு தான். இவ்வாறு கூறினார்.