எம்.எல்.ஏ.அருளின் கொறடா பதவியைப் பறிக்க முயற்சி.. அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு..!!
பாமக கொறடா பொறுப்பில் உள்ள அருளை மாற்றக்கோரி, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நிகழும் பதவி மோதலில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திண்டாடி வருகின்றனர். என் மூச்சுக்காற்று அடங்கும் வரை நானே பாமவின் நிறுவனர் மற்றும் தலைவர் என்றும், தனக்கே கட்சியில் முழு அதிகாரம் இருப்பதாகவும் ராமதாஸ் கூறி வரும் நிலையில், நான் தான் தலைவர் என அன்புமணி அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். அதேநேரம் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவிநியமன கடிதங்களை வழங்கி அன்புமணி ஆதரவை பெருக்கி வருகிறார்.

இதனிடையே ராமதாஸுக்கு பக்கபலமாக இருந்த எம்.எல்.ஏ. அருளை, நேற்று முன்தினம் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். தன்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்றும், ராமதாஸ் மட்டுமே பாமகவின் தலைவர் என்றும் எம்.எல்.ஏ அருள் தெரிவித்தார். இதேபோன்று அன்புமனியால் யாரையும் பொறுப்பில் இருந்து நிக்க முடியாது என்றும், நிர்வாகிகள் நியமனம் மற்றும் நீக்கத்தில் தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் மீண்டும் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாமக கொறடா பொறுப்பில் இருந்தும் எம்.எல்.ஏ அருளை மாற்ற வலியுறுத்தி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டபேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர். பாமக எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர். பாமக கொறடாவாக மயிலம் தொகுதி எம்.எல்.ஏ சிவக்குமாரை நியமிக்ககோரி மனு அளித்துள்ளனர்.


