சென்னை மக்களே கவனம்..! காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...!!

 
1 1

அடுத்த ஒரு வாரத்திற்கான தமிழக வானிலை நிலவரம் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு காலை நேர பனிமூட்டம் தொடரும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 30-32 டிகிரி செல்ஷியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-22 டிகிரி செல்ஷியஸாகவும் இருக்கக்கூடும். சில இடங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் நிலவும் பனிமூட்டம் காரணமாகக் Visibility (பார்வைத்திறன்) குறையக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் குறிப்பிடத்தக்க மழை பொழிவிற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே சென்னையில் காலை மற்றும் மாலையில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. அதற்கு மாறாக பகல் வேளையில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேர பயணம் மேற்கொள்பவர்கள், அதிகாலை மற்றும் மாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி கோடை வெப்பம் முன் கூட்டியே துவங்கி வருவது தெரிகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இனி குளிர் படிப்படியாக குறைய துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.