சென்னை மக்கள் கவனத்திற்கு..! 160 ரயில்கள் ரத்து: 45 நாட்களுக்குப் புதிய கால அட்டவணை..!
சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக, வழக்கம் போல் 10 மற்றும் 11 ஆவது நடை மேடைகளில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் வருகின்ற 20 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி நள்ளிரவு வரை 45 நாட்களுக்கு 5 மற்றும் 6 ஆவது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் மார்க்கத்தில் அனைத்து மின்சார ரயில்களும் 6 ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்படும். அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - தாம்பரம் - கடற்கரை மறு மார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரயில்களும் இதே கால கட்டத்தில் எழும்பூரில் 5 ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்படும்.
மின்சார ரயில்கள் விரைவு பாதையில் இருந்து இயக்கப்பட உள்ளன. ரயில் எண் மற்றும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள மின்சார சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த 45 நாட்களில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது.
புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் 164 மின்சார ரயில்கள் இயக்கப்படும். 84 ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும் 80 ரயில்கள் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்தும் இரு மார்க்கமும் இயக்கப்பட உள்ளது. இதுவரையில் 10, 11வது பிளாட்பாரத்தில் 324 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் 160 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரயில் பிளாட்பாரம் மாற்றத்தால் ராமேஸ்வரம் சேது ரயில் மட்டும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு உள்ளதால் ரயில் நிலையங்களுக்கு இடையே போக்குவரத்தை ஏற்படுத்துவதற்காக மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை பாதுகாப்பு சோதனை மார்ச் மாதம் நடைபெற்று இறுதியில் சேவை தொடங்கும். இதே போல கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளும் நிறைவுப் பெற்றுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மார்ச் மாதம் திறக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை மின்சார ரயில்களில் வருகிற காலங்களில் தானியங்கி கதவு பொருத்துவதற்கு திட்டம் உள்ளது. ரயில் நிலையங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்தார்.



