அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற பாலமுருகன்
மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு முதல் பரிசாக கார், சிறந்த காளையாக அவனியாபுரம் விருமாண்டி பிரதர்ஸ் மந்தை முத்துகருப்பன் காளை உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் காலை 7 மணிக்கு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்கு பின் அமைச்சர் பி.மூர்த்தி , மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் போட்டியினை வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கிவைத்தனர். இதனையடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 568 மாடுபிடி வீரர்களும் 12 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 937 காளைகளும் அவிழ்க்கப்பட்டது. 11 சுற்றுகளிலும் இருந்து சிறப்பாக காளைகளை பிடித்த சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட 25 மாடுபிடி வீரர்கள் இறுதி சுற்றில் கலந்துகொண்டனர்.
போட்டியில் அவிழ்க்கப்பட்ட காளைகள் வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வீரர்களை வெற்றி பெற்று பரிசுகளை அள்ளி சென்றது. போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரரான 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு முதல் பரிசாக நிசான் கார் வழங்கப்பட்டது. போட்டியில் 17 காளைகளை அடக்கி 2 ஆவது இடம் பிடித்த மாடுபிடி வீரர் அவனியாபுரம் கார்த்திக்கிற்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியின் முடிவில் சிறந்த காளையாக 60 நொடி தொடர்ந்து களத்தில் களமாடிய அவனியாபுரம் விருமாண்டி பிரதர்ஸ் மந்தை முத்துகருப்பன் காளை தேர்வு செய்யப்பட்டு காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 55 நொடி களத்தில் சிறப்பாக களமாடி 2ஆவது இடம் பிடித்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் மறைந்த GR கார்த்திக் வேலு காளைக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியின்போது 2200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் ,குக்கர், கட்டில், சைக்கிள் , சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டியானது மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. போட்டியின் முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகளும் பாராட்டு சான்றுகளை அமைச்சர் மூர்த்தி, மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், , மாநகராட்சி ஆணையாளர் சித்ராவிஜயன்,மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் வழங்கினர். போட்டியில் மாடு குத்தியதில், காவல்துறையினர் உட்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளைஉரிமையாளர்கள் , உள்ளிட்ட 60 பேர் காயமடைந்த நிலையில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


