ஆயுதபூஜைக்கு பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்பாடு - போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

 
bus

தீபாவளி, பொங்கலை போல ஆயுதபூஜைக்கும் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இந்த பண்டிகைகளையொட்டி சென்னையில் வசிக்கும் மக்கள்  தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. விறுவிறுப்பாக ஆன்லைனில் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.

BUS

இந்த நிலையில், ஆயுதபூஜைக்கும் பேருந்துகளில் கூட்டநெரிசலை தவிர்க்க போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்திருக்கிறது. இது குறித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தடுக்க கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி, பொங்கலை போல நெரிசலை தவிர்க்க 12, 13ம் தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, சேத்துப்பட்டு, போரூர் செல்லும் பேருந்துகள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர், செய்யாறு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.