அரசுப் பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு! 2k கிட்ஸ்களின் அட்ராசிட்டி
வேலூரில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு செய்வது போன்று ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட மாணவிகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 12 - ம் வகுப்பு மாணவிகள் சிலர் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று, இன்விடேஷன் கார்டை ரெடி பண்ணி, பள்ளியின் மேல் தளத்தில் வளைகாப்பு நடத்த தேவையான பொருட்களுடன் மாணவி ஒருவரை அமர வைத்து வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி கூறுகையில், “ இது மாணவிகள் தொடர்பான பிரச்சனை என்பதால் நிதானமாக தீர விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து விசாரித்துள்ளோம். மேலும் இப்போதைக்கு அந்த பள்ளியில் மட்டும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்களையும் மாணவிகளோடு அமர்ந்து சாப்பிட சொல்லியுள்ளோம். ஏற்கனவே பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அந்த மாணவிகளின் பெற்றோரையும் அழைத்து பேச திட்டமிட்டுள்ளோம்” என்றார்.