சென்னையில் 'பகீர்' சம்பவம்..!! பணம் இல்லாததால் மூதாட்டி உடலை மூட்டைக் கட்டி சாலையோரம் வீசிய முதியவர்..!!

 
Q
மரணித்த மனைவியை அடக்கம் செய்ய பணம் இல்லாத கணவர், உடலை சாக்குமூட்டையில் கட்டி சாலையோரம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
யாராவது நல் உள்ளங்கள் தனது மனைவியை அடக்கம் செய்யமாட்டார்களா எனத் தவிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டது, ஏழ்மையின் கொடூரத்தை காட்டுகிறது
சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் முக்கனி அம்மன் கோயில் தெருவில், சாலை ஓரத்தில் கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பல்லாவரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சாக்கு மூட்டையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலமாக கிடந்தது தெரிய வந்தது.
போலீஸாரின் தீவிர விசாரணையில், இறந்த மூதாட்டி அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (75) என்பதும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே அவரது கணவர் இறந்து விட்டார் என்பதும் தெரிய வந்தது.
பாக்கியலட்சுமிக்கு பத்து பிள்ளைகள் இருந்தும், ஒருவரும் அவரை கவனித்துக் கொள்ள முன் வரவில்லை என கூறப்படுகிறது. ஆகையால், அவர் வசிக்கும் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். அத்துடன், திரிசூலம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த முகமது அசன் (63) என்பவருடன் பழக்கத்தின் காரணமாக மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். எனவே, இறப்பு குறித்து மூதாட்டி உடன் வாழ்ந்து வந்த முகமது அசனிடம் போலீஸார் தங்களின் விசாரணையைத் தொடங்கினர். அப்போது முதியவர் முகமது அசன் கூறியது போலீஸாரையே திடுக்கிடும் செய்யும் வகையில் அமைந்தது.
முதியவர், ஹோட்டலில் வேலை பார்த்து வந்த நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அவர் வேலை பார்த்து வந்த ஹோட்டல் மூடப்பட்டது. இதனால் வேலையிழந்த முகமது அசன், வருமானத்திற்காக திண்டாடி வந்துள்ளார். இந்த சூழலிலேயே உடல் நலக்குறைவு காரணமாக பாக்கியலட்சுமி உயிரிழந்து உள்ளார்.
உடலை அடக்கம் செய்வதற்கு கூட பணம் இல்லாத காரணத்தால், மூதாட்டியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரத்தில் வீச அவர் முடிவு செய்துள்ளார்.
சமூக ஆர்வலர்கள் யாராவது உடலை கைப்பற்றி அடக்கம் செய்து விடுவார்கள் நினைத்தே தான் இவ்வாறு செய்ததாக போலீஸாரிடம் முதியவர் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பல்லாவரம் போலீஸார், தொடர்ந்து சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாத காரணத்தால், மூதாட்டி உடல் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.