சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்- பாலச்சந்திரன் பேட்டி
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டத் தலைவர் பாலச்சந்திரன், “திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 15 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழக்கவில்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும்போது அதிகனமழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகனமழை பெய்யும் என்பதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் என்பதால் அனைத்து இடங்களிலும் 20 செமீ மழை பொழியும் என்பது கிடையாது. மழைக்காக மட்டுமே ரெட் அலர்ட் கிடையாது. பாதிப்புகளையும் கருத்தில் கொண்டே எச்சரிக்கை விடப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. இதுவரை இயல்பை விட 94% அதிக மழை பெய்துள்ளது” என்றார்.