இந்த நாட்களில் அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்ல தடை!!

 
ttn

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில்  30,208 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 64ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 264ஆக உள்ளது.  நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக பதிவாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ttn

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று  பரவல் என்பது அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தொற்று வேகமெடுக்க ஆரம்பித்து விட்டது.  இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட  அகஸ்தியர் அருவி , மணிமுத்தாறு அருவி,  மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு நாளை  மற்றும் அடுத்த மாதம் 4, 5, மற்றும் 6 ஆம் தேதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

tn

விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  குடியரசு தின விடுமுறை நாளான நாளையும்,   அடுத்த மாதம் முதல் வாரத்தில்  வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்றி கொரோனாவிலிருந்து  தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.