உண்மையான சனாதன தர்மத்தை உலகிற்கு உணர்த்தி, வாழ்ந்துகாட்டியவர் பங்காரு அடிகளார் - விஜயகாந்த் இரங்கல்!!

 
vijayakanth

உண்மையான சனாதன தர்மத்தை உலகிற்கு உணர்த்தி, வாழ்ந்துகாட்டியவர் பங்காரு அடிகளார் என்று விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தி கேட்டு வேதனையடைந்தேன். மேல் மருவத்தூரில் உள்ள கோயில் கருவறைகளில் பெண்களும் சென்று வழிபாடு நடத்தும் முறையை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார். அவரது ஆன்மீக சேவையை பாராட்டி கடந்த 2019ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

tn

பாமர மக்கள் கூட அம்மன் சன்னிதானத்தில் சென்று வழிபாடு நடத்தலாம் என்ற புரட்சி செய்தவர். மாதவிடாய் காலத்தில் கூட பெண்கள் தெய்வத்திற்கு உண்டான சேவைகளை செய்யலாம்; அதனால் சக்தி ஒன்றும் போய்விடாது என்ற தத்துவத்தை உலகத்திற்கு சொன்னவர் .  சபரிமலைக்கு எப்படி இருமுடி கட்டி வருகிறார்களோ , அதுபோல் பங்காரு அடிகளாரின் ஆதி பராசக்தி பீடத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் சிவப்பு சீருடை, மாலை அணிந்து பக்தர்கள் வழிபட செய்தது, ஆன்மீகத்தில் அவர் செய்த புரட்சியாகும். 

tn

ஆன்மீகம் மட்டுமின்றி கல்வி , மருத்துவம், சமூக சேவைகள் செய்து , தமிழகம் மற்றும் அண்டை மாநில மக்களின் அன்பை பெற்றவர் திரு. பங்காரு அடிகளார். நானும் எனது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் பலமுறை மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலுக்கு சென்று அவரிடம் ஆசி பெற்றுள்ளோம். அனைவராலும் அன்போடு  "அம்மா" என்று அழைக்கப்பட்ட திரு. பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு, ஆன்மீக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். உண்மையான சனாதன தர்மத்தை உலகிற்கு உணர்த்தி , வாழ்ந்துகாட்டியவர்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்கள், மற்றும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.