நாடு முழுவதும் வரும் 27ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!
நாடு முழுதும் உள்ள வங்கிகளுக்கு, இரண்டாம் மற்றும் நான்காம் சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை மாற்றி, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என, வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எல்.ஐ.சி., ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தைகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவதால், வங்கிகளுக்கும் இந்த முறையை நீட்டிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடு முழுதும் உள்ள வங்கி ஊழியர்களில் பெரும்பாலானோர் அங்கம் வகிக்கும் யு.எப்.பி.யூ., எனப்படும் 'யுனைடெட் பாரம் ஆப் பாங்க் யூனியன்ஸ்' சங்கமும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறது. கடந்த 2024, மார்ச் மாதம் நடந்த ஊதிய திருத்தம் தொடர்பான பேச்சின் போதே இதற்கு தீர்வு எட்டப்பட்ட நிலையில், அது இன்னும் அமல்படுத்தப்படாமல் உள்ளதாக இந்த சங்கத்தினர் குற்றஞ்சாட்டிஉள்ளனர். இது தொடர்பாக சமீபத்தில் வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வாரந்தோறும் ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலவுகிறது. இதை அமல்படுத்த ஒப்புக்கொண்டால், திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில், கூடுதலாக 40 நிமிடங்கள் பணியாற்ற நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். 'இருப்பினும், இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை. இந்த கோரிக்கை, வேலையை குறைப்பது அல்ல; மாறாக மனிதாபிமானத்தின் அடிப்படையில் கோரப்படுகிறது' என, கூறப்பட்டது.
வரும் 27ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால், நாடு முழுதும் வங்கி சேவைகள் நான்கு நாட்களுக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரும் 24 நான்காவது சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிறு, அதற்கு அடுத்த நாளான 26 குடியரசு தினம் என்பதால் விடுமுறை. அடுத்த நாளான 27ல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், நான்கு நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. டிஜிட்டல் வங்கி சேவைகள், ஏ.டி.எம்., செயல்பாடுகளில் பாதிப்பு இருக்காது என கூறப்பட்டாலும், கிளைகளில் ஊழியர்கள் இல்லாததால் காசோலை பரிவர்த்தனைகள், கடன் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். கிராமப்புற வாடிக்கையாளர்கள், மூத்த குடிமக்கள், சிறு வணிகர்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான அணுகல் குறைவாக உள்ளவர்கள் இதனால், நிச்சயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக, வங்கி ஊழியர்களின் சங்கங்களுடன் அரசு பேச்சு நடத்தும் என கூறப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


