அதிமுக எம்எல்ஏ கொலை வழக்கில் கைதான பவாரியா கொள்ளையர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு
கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கே.சுதர்சனம் சுட்டுகொல்லப்பட்ட வழக்கில் மூன்று பவாரியா கொள்ளையர்கள் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம்.கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. தனது கட்சி எம்.எல்.ஏ. கொல்லப்பட்டது குறித்து அறிந்த முதல்வர் ஜெயலலிதா, கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மிகத் தீவிரமாகச் செயல்பட்ட தனிப்படை, அடுத்த மாதத்திலேயே கொள்ளையர்கள் யார் எனக் கண்டுபிடித்தது. முக்கியக் குற்றவாளியை பிப்ரவரி 1 ம் தேதி கைது செய்தது. தொடர் துப்பு துலக்கி மார்ச் மாதத்தில் ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். செப்டம்பரில் முக்கியக் குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். ராஜஸ்தானில் பவாரியா கொள்ளையர்களை ஜாங்கிட் குழுவினர் பிடித்த சாகசக் கதை பின்னர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமாக வெளிவந்தது. தனிப்படை போலீஸார், 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டார்.

மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார். வழக்கில், 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட நான்கு பேருக்கு எதிரான இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதில் ஜெயில்தார்சிங் ஏற்கனவே ஜாமீனில் இருந்ததால் அவரும் ஆஜரானார். இதையடுத்து நீதிபதி, ஜெயிலதார் சிங் தவிர மற்ற மூன்று பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அவர்களிடம் நீதிமன்ற ஊழியர் மொழிபெயர்த்து தெரிவித்தார். அதற்கு மூன்று பேரும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்தனர் இதையடுத்து தண்டனை விவரங்களை வரும் 24ம் தேதி அறிவிக்க உள்ளதாக நீதிபதி ஆபிரகாம் லிங்கன் தெரிவித்தார்.


