மிரட்டும் டிட்வா புயல்- கருப்பாக மாறிய கடல் நீர்
வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்திற்கு கிழக்கு வடகிழக்கு மற்றும் சென்னை தெற்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது

டிட்வா புயல் காரணமாக நேற்று காலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று காலையில் இருந்து தற்பொழுது வரை மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. புயலின் காரணமாக காற்றின் வேகம் அதிகளவு காணப்படுவதால் கடற்கரை பகுதிகளில் கடலின் சீற்றமானது அதிக அளவு காணப்படுகிறது. கடல் அலைகள் 5 அடி முதல் 10 அடி உயரம் வரை மேல எழும்பி சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகளின் சீற்றத்தின் காரணமாக கடல் நீரின் நிறம் ஆனது தற்பொழுது கருப்பு நிறத்தில் காணப்படுகிறது
புயலின் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது இதன் காரணமாக சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர் குறிப்பாக கடற்கரையில் இருந்து கடலின் அருகே நிறுத்தி வைக்கப்படும் படகுகள் கடல் அலை சீற்றத்தின் காரணமாக அடித்து செல்லாதவாறு தற்போது வழக்கத்திற்கு மாறாக கடற்கரையின் மேடான பகுதியில் மீனவர்கள் பாதுகாத்து வைத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு பொழுதுபோக்கிற்காக வருவது வழக்கம் ஆனால் டிட்வா புயலின் எதிரொலியாக கடல் அலையின் சீற்றத்தின் காரணமாக இன்று பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடற்கரை பகுதிகளுக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் இருந்தே போலீசாரும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடற்கரை பகுதிகளுக்கு அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் யாரும் வராத காரணத்தால் கடற்கரை பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது. புயலின் காரணமாக கடற்கரை பகுதியில் உள்ள மணல் சாலைக்கு அடித்து வரப்பட்டுள்ளது அவ்வபோது லேசான சாரல் மழை பெய்து வருவதால் சாலை பட்டினப்பாக்கம் ஒரு சில இடங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.


