மக்களே உஷார்..! S.I.R படிவத்தில் தவறான தகவல் தந்த குடும்பம் மீது வழக்கு..!
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உண்மையான வாக்காளர்களைக் கண்டறிதல், பல இடங்களில் உள்ள ஒரே வாக்காளர்களை அடையாளம் காணுதல், அத்துடன் இடம் மாறிய மற்றும் உயிரிழந்த வாக்காளர்கள் குறித்த விவரங்களை நீக்குதல் போன்றவையே இந்த எஸ்ஐஆர் பணியின் முக்கிய நோக்கங்களாகும். பீகார், மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் இந்தப் பணிகள் வேகம் எடுத்துள்ளன.
தேர்தல் ஆணையத்தின் இந்த எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், நாட்டிலேயே முதல்முறையாக ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் நடந்துள்ளது. அங்கு, எஸ்ஐஆர் விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்ததாக ஒரு பெண் உட்பட மூன்று பேர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராம்பூர் பகுதியின் ஜூவாலா நகரைச் சேர்ந்த நூர்ஜஹான் என்பவர், தனது மகன்களான ஆமிர் கான் மற்றும் டானிஷ் கான் ஆகியோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக எஸ்ஐஆர் படிவத்தைச் சமர்ப்பித்துள்ளார். ஆனால், இந்த மகன்கள் நீண்ட காலமாகவே துபாய் மற்றும் குவைத்தில் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். படிவத்தில் அவர்கள் ஜூவாலா நகரில் வசிப்பதாக நூர்ஜஹான் குறிப்பிட்டுள்ளார்.
நூர்ஜஹான் சமர்ப்பித்த படிவத்தின் பேரில், தேர்தல் ஆணையத்தின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஜூவாலா நகர் பகுதியில் களச் சரிபார்ப்பில் ஈடுபட்டனர். டிஜிட்டல் சரிபார்ப்பின் போது, நூர்ஜஹான் வழங்கிய தகவல்கள் தவறானவை என்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, தனது மகன்கள் ஜூவாலா நகரில் வசிப்பதாகக் குறிப்பிட்டு, இருவரின் கையெழுத்தையும் நூர்ஜஹானே போட்டு மோசடியாகப் படிவத்தைச் சமர்ப்பித்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, தாய் நூர்ஜஹான் மற்றும் அவரது இரு மகன்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் மகன்கள் உள்ளூரில் வசிப்பது போல் தாய் வேண்டுமென்றே தகவல்களை நிரப்பி கையெழுத்திட்டது, 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 31-ஐ மீறுவதாகும். இந்த சட்டப்பிரிவின்படி, வாக்காளர் நிலை குறித்து தவறான அறிவிப்பு அல்லது தகவலை அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். மூன்று பேரும் உண்மைகளை மறைத்து மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டு, பிஎன்எஸ் 2023 (பாரதிய நியாய சன்ஹிதா) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ராம்பூர் மாவட்ட ஆட்சியர் அஜய்குமார் திவேதி கூறுகையில், "தலைமை தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகின்றன. தவறான தகவல்களுடன் படிவங்களை தாக்கல் செய்வது அல்லது உண்மைகளை மறைப்பது தேர்தல் விதிகளை கடுமையாக மீறுவதாகும்" என்று தெரிவித்தார்.


