மக்களே உஷார்..! தமிழகத்தில் அதிகரித்து வரும் இன்புளூயன்சா காய்ச்சல்...!

 
Q Q

1918-ம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய நோயாக 'இன்புளூயன்சா' எனப்படும் புளூ காய்ச்சல் இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்த நோய்க்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர்.

பின்னர், மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசியை கண்டு பிடித்து இந்த கொள்ளை நோயின் வீரியத்தை கட்டுப்படுத்தினர். இதையடுத்து 'இன்புளுயன்சா' நோய் குணப்படுத்தக்கூடிய சாதாரண வகை காய்ச்சல் போன்று மாறியது. கோடை வெயில் காலம் முடிவடைந்து பருவமழை தொடங்கும் காலகட்டத்தில் இந்த 'இன்புளூயன்சா' வைரஸ் தொற்று பரவுவது வழக்கம்.

தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கால நிலை மாற்றம் மற்றும் மழையின் காரணமாக காய்ச்சல் தொற்றுகள் பரவி வருகின்றன. இதில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் காய்ச்சல் தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்கு இருமல், சளி, தலைவலி, உடல் சோர்வு, தொண்டை கட்டுதல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதித்தவர்களில் ஒரு சிலருக்கு காய்ச்சல் குறைந்தாலும் இருமல் மற்றும் சளி குறைந்தது 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கிறது.

இந்த காய்ச்சல் பரவல் தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சில தகவல்களை கூறியுள்ளது. அதில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வைரல் காய்ச்சல் பரவ சாதகமான கால நிலை உள்ளது. இதனால், வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி, தலைவலி, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்.

தற்போது, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா வருபவர்களில் 2 சதவீதம் பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேருக்கு இன்ஃப்ளுயன்ஸா வகை காய்ச்சல் உள்ளது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு டெங்கு மற்றும் டைபாய்டு மற்றும் சாதாரண காய்ச்சலால் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தற்போது, தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் இன்ஃபுளூயன்ஸா வகை காய்ச்சல் பாதிப்பு தான். இந்த காய்ச்சல் தொற்று குறித்து மக்கள் பயப்பட வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.