#BIG NEWS : வங்கி ஊழியர்கள் 11-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்...! 4 நாட்கள் வங்கிகள் மூடல்..!!
நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் வங்கி கிளைகளை மூடி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராமிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்.
இந்த வேலை நிறுத்தத்தையொட்டி வங்கிகள் தொடர்ந்து 4 நாட்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் நடக்கின்ற (வெள்ளிக்கிழமை) வங்கிகள் முழுமையாக மூடப்படுகிறது. மறுநாள் (சனிக்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறையாகும். 14-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையாகும். 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வங்கிகள் முழுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வார இறுதி நாள் தொடங்கி வாரத்தின் முதல் நாள் வரை 4 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்ற நிலை ஏற்பட்டு இருப்பதால் சேவை கடுமையாக பாதிக்கப்படும். அனைத்து வங்கிகளிலும் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கக்கூடும். பல்லாயிரக்கணக்கான காசோலை பரிமாற்றங்கள் நடைபெறாமல் பாதிப்பு ஏற்படும்.
இது குறித்து அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-
நாடு முழுவதும் 7 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளுக்கு பிரதி மாதம் சனி, ஞாயிறு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதனை அமல்படுத்த மறுத்து வருகிறது.
மேலும் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் மற்ற கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நிர்வாகம் மற்றும் அரசு தயக்கம் காட்டுகிறது.
எனவே நாளை மறுநாள் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டு ஊழியர்கள் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் வங்கிக் கிளைகள் செயல்படாது. சேவை கடுமையாக பாதிக்கும். ஏ.டி.எம். மையங்களும் இயங்குவதற்கு வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தவிர வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி தெரிவித்து உள்ளார்.

