வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவு..!

 
1

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் மக்களவையில் பேசினர். இது வக்ஃப் வாரியத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது என்றும், மசூதிகள் விவகாரத்தில் தலையிடும் முயற்சி அல்ல என்றும் அவர்கள் கூறினர்.

மக்களவையில் மசோதாவை ஆதரித்துப் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன் சிங், “இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என பல உறுப்பினர்கள் உரக்க பேசினார்கள். இது எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானது? இங்கே பேசியவர்கள் அயோத்தி விவகாரத்தை உதாரணமாகக் காட்டினார்கள். கோயிலுக்கும் நிறுவனத்துக்கும் வித்தியாசம் கிடையாதா? இது மசூதிகளில் தலையிடும் முயற்சியல்ல. இந்தச் சட்டம் வக்ஃப் வாரியம் எனும் நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவே.

வக்ஃப் வாரியம் எப்படி உருவாக்கப்பட்டது? அது ஒரு சட்டத்தின் மூலம். சட்டத்தின் மூலம் நிறுவப்படும் எந்தவொரு நிறுவனமும் எதேச்சதிகாரமாக மாறும். வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த ஒரு சட்டத்தை கொண்டு வர அரசுக்கு உரிமை உள்ளது. இங்கு மத பிளவு இல்லை. எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகிறார்கள். 1984 சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார்? ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்றது யார்? இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்; வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

வக்ஃப் மசோதா குறித்து பேசிய தெலுங்கு தேசம் கட்சி எம்பி ஹரிஷ் பாலயோகி, “இந்த மசோதாவை மிகுந்த அக்கறையுடன் அரசு கொண்டு வந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். நன்கொடைகள் எதற்காக கொடுக்கப்பட்டனவோ அந்த நோக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். நோக்கமும் அதிகாரமும் தவறாகப் பயன்படுத்தப்படும்போது சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும், அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம்.

நாட்டின் ஏழை முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு இது உதவும்; வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை ஆலோசனைக்காக இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படுமானால், அது குறித்து எங்கள் கட்சி கவலைப்படாது. தவறான கருத்துகள், தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும், மசோதாவின் நோக்கத்தை அறிந்துகொள்ளவும் பரந்த ஆலோசனைகள் தேவைப்பட்டால், அதை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று அவர் கூறினார்.

இதனிடையே, சச்சார் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையிலேயே வக்ஃப் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், மத சுதந்திரத்தில் தலையிடும் நோக்கம் இதில் இல்லை என்றும் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தெரிவித்தார்.